கொரோனாவால் சிதைந்த மண்பாண்ட தொழில்: ஊரடங்கு தளர்வு செய்த போதும் வறுமையில் வாடும் தொழிலாளர்கள்
ஊரடங்கு தளர்வு செய்தபோதும் மண்பாண்ட தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர்.
கோவை,
ஊரடங்கு தளர்வு செய்தபோதும் மண்பாண்ட தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர்.
மண்பாண்ட தொழிலாளர்கள்
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. அனைத்து தரப்பிலும் பொருளாதாரத்தை நசுக்குவதுடன், ஏழை தொழிலாளர்களையும் பாதிப்படைய செய்து உள்ளது. தமிழகத்தில் பல்வேறு தொழில்களுக்கு படிப்படியாக ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இதையடுத்து தொழிலாளர்கள் ஆர்வத்துடன் தங்களது பணிகளை தொடர்ந்தனர். இதேபோல் மண்பாண்ட தொழிலாளர்களும் தங்களது பணிகளை வேகமாக செய்தனர். தற்போது கோடை கால சீசன் என்பதால் தண்ணீர் வைத்து குடிக்கும் பானைகள், பூந்தொட்டிகள், ஜாடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மண்பாண்டங்களை உற்பத்தி செய்தனர்.
ஆனால் உற்பத்தி செய்த மண்பாண்ட பொருட்களை வாங்க ஆள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர்.இதுகுறித்து கோவை கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி தண்டபாணி கூறியதாவது:-
தொழிலாளர்கள் திண்டாட்டம்
நான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மண்பானை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். மண்பாண்ட தொழிலை நம்பி எங்கள் பகுதியில் 65 குடும்பங்கள் உள்ளன. மண்பாண்ட தொழிலில் காலநிலைக்கு ஏற்ப தேவையான பொருட்களை தயார் செய்வோம். கோடை காலத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கும் பானைகள், ஜாடி, கூஜா போன்ற வடிவங்களில் தயார் செய்வோம்.
நடப்பு கோடை காலத்தில் கொரோனா வந்ததால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் எங்களது தொழில் முழுமையாக முடங்கி விட்டது. கோடை காலம் முடிவடையும் தருவாயில் அனுமதி கொடுத்த உடன் மண்பாண்டங்களை உற்பத்தி செய்தோம். ஆனால் அதனை வாங்குவதற்கு ஆள் இல்லாததால் தொழிலாளர்கள் திண்டாடி வருகிறோம். மேலும் மண்பாண்ட பொருட்கள் செய்ய தேவையான மண்ணுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
நிவாரணம் வழங்க வேண்டும்
மழை காலத்தில் செடிகளை வளர்ப்பதற்கு தேவையான தொட்டிகள், நர்சரி பண்ணைக்கு தேவையான தொட்டிகள், பாசனத்துக்கு பயன்படுத்தும் பல்வேறு வகையான பொருட்கள் தயார் செய்து கொடுப்போம். கார்த்திகை மாதம் அகல்விளக்குகள், தை மாதம் பொங்கல் பானைகள் என செய்து விற்பனை செய்வோம். இடைப்பட்ட காலங்களில் விறகு அடுப்பு தயார் செய்வோம். எங்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் தருவதாக கூறினார்கள். ஆனால் எங்கள் பகுதியில் 2 பேருக்கு மட்டுமே அந்த நிவாரணம் கிடைத்து உள்ளது.
மீதமுள்ளவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் மற்றும் ரேஷன் கடையில் கொடுத்த ரூ.1,000 நிவாரணம் மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வைத்து சமாளித்து வருகிறோம். எனவே, மண்பாண்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்குவதுடன், மண்பாண்டங்களை விற்பனை செய்வதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.