குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறப்பு: விளை நிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம்
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படுவதால் விளை நிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்,
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படுவதால் விளை நிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறுவை சாகுபடி
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம். குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
குறிப்பட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி அதிக அளவில் நடைபெறும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறையும். கடந்த 8 ஆண்டுகளாக ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தயார் செய்யும் பணி
குறிப்பிட்ட தேதியில் அணை திறப்பதால் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான நாற்றங்கால் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆற்றுப்பாசனத்தை நம்பி நடவு செய்யும் விவசாயிகள், விளை நிலங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சையை அடுத்த களிமேடு பகுதிகளில் டிராக்டர்கள், மாட்டு வண்டிகள் மூலம் எருவை கொண்டு வந்து விளை நிலங்களில் கொட்டி குவித்து வருகின்றனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டவுடன் வயல்களில் எருவை தூவி, உழவு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இந்த பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தொகுப்பு திட்டம்
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. இப்போது கர்நாடகத்தில் இருந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டவுடன் சாகுபடி பணியை மேற்கொள்வதற்காக எருவை வயல்களில் குவித்து வைக்கும் பணியை செய்து வருகிறோம்.
குறுவை சாகுபடிக்கு தேவையான விதைநெல், உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேளாண்மைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் வாங்கித்தான் விவசாய பணியை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். பயிர்க்கடன் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றனர்.