ரூ.10 ஆயிரம் கோடியில் 10 லட்சம் வீடுகள் கட்ட முடிவு - மந்திரி சோமண்ணா பேட்டி

கர்நாடகத்தில் ரூ.10 ஆயிரம் கோடியில் 10 லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா கூறினார்.

Update: 2020-05-30 21:30 GMT
பெங்களூரு,

வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“கர்நாடகத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1.80 லட்சம் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. அதேபோல் பல்வேறு வீட்டு வசதி திட்டங்கள் மூலம் மாநிலத்தில் சுமார் 10 லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவிடப்படுகின்றன. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பணிகளை முடித்து, அந்த வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைப்போம்.

மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 3.2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை மேலும் பலப்படுத்த முடிவு செய்துள்ளோம். வீடு வாங்குவோரின் நலனை கருத்தில் கொண்டு, அந்த சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய இருக்கிறோம். வீடு வாங்குவோர் ஏமாற்றப்படுவதை தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். கர்நாடக வீட்டு வசதி வாரியம் சார்பில் லே-அவுட்டுகள் உருவாக்கப்பட்டு 1,600 வீட்டுமனைகளை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 5,6 மாதங்களில் இந்த வீட்டு மனைகள் உரிய பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும்.

பெங்களூரு சூரியநகர் 4-வது கட்ட லே-அவுட்டில் 30 ஆயிரம் வீட்டு மனைகள் ஒதுக்க திட்டமிட்டு உள்ளோம். ஆனேக்கல் அருகே உள்ள முத்யால் மடுவு சுற்றுலா தலத்தில் குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது போல் சுவாமி விவேகானந்தர் சிலை அமைக்க திட்டமிட்டுள்ளோம். அங்கு 1,938 ஏக்கர் பரப்பளவில் 30 ஆயிரம் வீட்டு மனைகளை கொண்ட பிரதமர் டவுன்ஷிப் அதாவது புதிய நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.” இவ்வாறு சோமண்ணா கூறினார்.

மேலும் செய்திகள்