ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் நகரசபை தலைவர் உள்பட 15 பேருக்கு கொரோனா

முன்னாள் நகரசபை தலைவர், அவருடைய மனைவி உள்பட ஒரே நாளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-05-30 05:36 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே இதுவரை 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 21 பேர் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்தும், ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 6 பேரும், பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 10 பேரும் என மொத்தம் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரசபையின் முன்னாள் தலைவருக்கும், அவரின் 58 வயது மனைவிக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மேற்குவங்க மாநிலத்தில் இருந்து வந்த முதுகுளத்தூர் அருகே உள்ள வெங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கும், 51 மற்றும் 21 வயது ஆண்களுக்கும், மணலூர் பகுதியை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 9 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில் இருந்து வந்ததால் பார்த்திபனூர் பகுதி முகாமில் தங்கவைக்கப்பட்டு இருந்த நிலையில் இவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

80-ஆக உயர்வு

மேலும் ராமநாதபுரம் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணிற்கு பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதன் மூலம் மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80-ஆக உயர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து 3 பேரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும், மற்ற 12 பேரை பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேற்கண்டவர்கள் வசித்த பகுதியில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

42 பேருக்கு சிகிச்சை

அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு சுகாதாரத்துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 18 பேரும், பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 23 பேரும், சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் ஒருவரும் என மொத்தம் 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்