ஊரடங்கு காலத்தில் கோத்தகிரி விவசாயிகளிடம் இருந்து 340 டன் காய்கறிகள் கொள்முதல்

ஊரடங்கு காலத்தில் கோத்தகிரி விவசாயிகளிடம் இருந்து 340 டன் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டது.

Update: 2020-05-30 03:07 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயம் பிரதானமாக உள்ளது. காய்கறிகளை கழுவி சுத்தப்படுத்த அரசு சார்பில் காய்கறி கழுவும் எந்திரங்கள் இல்லாமல் இருந்தது. இதை கருத்தில் கொண்டு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் ரூ.10 கோடி செலவில் கோத்தகிரி, எஸ்.கைகாட்டியில் வேளாண் பல்நோக்கு மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்களில் காய்கறிகளை பதப்படுத்தும் கிடங்கு, கழுவும் எந்திரம், தரம் பிரிக்கும் அறை, விற்பனை ஏல மையம் உள்ளிட்ட வசதிகள் உள்ளது. வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து விவசாயிகளின் நிலங்களுக்கே சென்று காய்கறிகளை கொள்முதல் செய்து, அதனை ‘நம் சந்தை’ மூலம் நடமாடும் காய்கறி கடைகள் அமைத்து கிராமங்களுக்கு கொண்டு சென்று பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பயனடைந்து வருகிறார்கள்.

340 டன் காய்கறிகள் கொள்முதல்

இந்த நிலையில் 2 பல்நோக்கு மையங்களில் ஊரடங்கு காலத்தில் கடந்த 2 மாதங்களாக உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து மட்டுமல்லாமல் சமவெளி பகுதிகளில் இருந்தும் காய்கறிகளை கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேளாண்மை அலுவலர் வெற்றி கூறும்போது, கோத்தகிரியில் கடந்த 2 மாதங்களில் ரூ.75 லட்சம் மதிப்பிலான 340 டன் காய்கறிகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஒன்றிணைத்து, நிறுவனம் மூலம் 502 பழங்குடியின விவசாயிகள், 500-க்கும் மேற்பட்ட பிற விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது விவசாயிகள் தங்களது தோட்டத்தில் இருந்து சரக்கு வாகனத்துக்கு காய்கறி மூட்டைகளை சுமந்து செல்லும் கூலியாக ரூ.60 வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்