சேலம் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வெளியே வந்தால் கைது; கலெக்டர் ராமன் எச்சரிக்கை

சேலம் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

Update: 2020-05-30 02:20 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

முககவசம் அணிவதால் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். அதனால்தான் முககவசம் அணிவது கட்டாயம் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள். இதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், 20 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 385 கிராம ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் அனைவரும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு முககவசம் அணியாதவர்கள் கண்டறியப்பட்டால் அந்தந்த பகுதிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் மூலம் அபராதம் விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் மற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் பணிபுரிபவர்கள், அனைத்து வகையான அலுவலகங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

முதல் முறையாக முககவசம் அணியாமல் வந்தால் ரூ.100 அபராதமும், அதே நபர் 2-வது முறையாக முககவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டால் ரூ.500 அபராதமும், அதே நபர் 3-வது முறையாக முககவசம் அணியாமல் வெளியே வந்தது கண்டறியப்பட்டால் அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நோய் தொற்று பரவாமல் தடுக்க முககவசம் அணியாமல் வெளியே வந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்