சென்னையில் ‘பாசிட்டிவ்’, குமரியில் ‘நெகட்டிவ்’ போலீஸ்காரரின் கொரோனா பரிசோதனையில் முரண்பாடு
சென்னையில் இருந்து குமரிக்கு வந்த போலீஸ்காரருக்கு கொரோனா பரிசோதனை முடிவில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
சென்னையில் இருந்து குமரிக்கு வந்த போலீஸ்காரருக்கு கொரோனா பரிசோதனை முடிவில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் ‘பாசிட்டிவ்‘ என்றும் குமரியில் ‘நெகட்டிவ்‘ என்றும் வந்துள்ளது.
சென்னை போலீஸ்காரர்
சென்னையில் உள்ள தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் குமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 39 வயது போலீஸ்காரர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள மாநகராட்சி நகர்நல மையத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பரிசோதனை முடிவு வருவதற்குள் அவர் அங்கிருந்து விடுப்பில் ஊருக்கு வந்து விட்டார். இ-பாஸ் வாங்காமல் லாரியை பிடித்து அவர் நேற்று முன்தினம் குமரி மாவட்டத்துக்கு வந்ததாக தெரிகிறது. பின்னர் அவர் தோப்பூரில் உள்ள வீட்டுக்குச் செல்வதற்குள் சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் போலீஸ்காரருக்கு செல்போன் மூலம் பேசி பரிசோதனையில் கொரோனா இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
டாக்டர்களுக்கு சந்தேகம்
இதனால் வீட்டுக்குச் செல்ல மனமில்லாத அவர் நேராக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்குச் சென்று விவரங்களைத் தெரிவித்தார். இதையடுத்து அவரை ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி அவருக்கு சளி மாதிரிகளை சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதற்கான பரிசோதனை முடிவு நேற்று முன்தினம் காலை வந்தது. ஆனால் இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிய வந்தது.
சென்னையில் நடந்த பரிசோதனையில் கொரோனா இருப்பதாக பரிசோதனை அறிக்கை வந்தவருக்கு, நாகர்கோவிலில் நடந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என வந்திருப்பது டாக்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. சென்னையில் நடந்த பரிசோதனையில் தவறு நடந்துள்ளதா? நாகர்கோவிலில் நடந்த பரிசோதனையில் தவறு நடந்துள்ளதா? என்ற சந்தேகமும் டாக்டர்களுக்கு உருவானது.
மீண்டும் இன்று பரிசோதனை
கொரோனா தொற்று கண்டறியப்பட்டவருக்கு மறு பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது தெரிய வந்தால் அவருக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் 2-வது கட்ட பரிசோதனை நடத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி போலீஸ்காரருக்கு இன்று (சனிக்கிழமை) 2-வது கட்ட பரிசோதனை நடத்தப்படுகிறது. இதிலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தால் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.