தர்மபுரி மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க நிதி ஒதுக்கீடு

தர்மபுரி மாவட்டத்தில் 14,400 ஏக்கர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-05-30 01:05 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் கிரிசி சஞ்சய் யோஜனா நுண்ணீர் பாசன திட்டம் மூலம் 2020-2021-ம் ஆண்டில் 14,400 ஏக்கர் நிலப்பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.100.80 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 19 சதவீதம் எஸ்.சி. பிரிவினருக்கும், 1 சதவீதம் எஸ்.டி. பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் அதிகபட்சமாக சிறு, குறு விவசாயிகள் 5 ஏக்கர் வரையும், பெரு விவசாயிகள் 12½ ஏக்கர் வரையும் சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம். இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து அந்தந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். நுண்ணீர் பாசன திட்டத்துடன் இணைத்து மேற்கொள்ள துணை நீர் மேலாண்மை செயல்பாடு என்ற திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு புதிதாக டீசல் மோட்டார்கள் மற்றும் மின் மோட்டார்கள் வாங்க அதிகபட்சம் ரூ.15 ஆயிரமும், பைப்லைன் அமைக்க ரூ.10 ஆயிரமும், தரைமட்டத்தில் தண்ணீரை தேக்கி வைப்பதற்கான தொட்டி கட்டுவதற்கு ரூ.40 ஆயிரமும் 50 சதவீத மானியமாக வழங்கப்படும். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய தங்கள் வட்டார பகுதியை சேர்ந்த தோட்டகலை உதவி இயக்குனர்களை விவசாயிகள் அணுகலாம். தர்மபுரி மாவட்ட விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்து அரசு மானியத்தை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்