கர்நாடகத்தில் மூடப்பட்ட பெண்கள் ஆதரவு மையங்களை மீண்டும் திறக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு
கர்நாடகத்தில் மூடப்பட்ட பெண்கள் ஆதரவு மையங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு,
முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அந்த துறையின் மந்திரி சசிகலா ஜோலே, அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை முதன்மை செயலாளர் ராகேஷ்சிங், இயக்குனர் தயானந்த் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-
மத்திய அரசின் உதவியுடன் ஒன் ஸ்டாப் மையங்கள் தொடங்கப்பட்டது. அதனால் பெண்களின் பிரச்சினைகளை பரிசீலித்து வந்த ஆதரவு மையங்களை மூட முடிவு செய்யப்பட்டது. ஆனால் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்களுக்கு அந்த ஆதரவு மையங்கள் அடைக்கலமாக செயல்படுகின்றன. அதனால் அந்த ஆதரவு மையங்களை மீண்டும் திறக்க வேண்டும்.
பாக்கியலட்சுமி திட்டத்தை தபால் அலுவலகம் மூலம் சுகன்யா சம்ருத்தி திட்டத்தின் கீழ் செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தானியங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த காலக்கட்டத்தில் 278 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அங்கன்வாடி ஊழியர்கள் முகக்கவசங்களை தயாரித்து வினியோகம் செய்துள்ளனர். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.