தி.மு.க. எம்.பி.க்கள் அளித்த மனுக்கள் போலியானது என்ற அமைச்சர் காமராஜின் குற்றச்சாட்டு பொய்யானது எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேட்டி

தி.மு.க. எம்.பி.க்கள் அளித்த மனுக்கள் போலியானது என்ற அமைச்சர் காமராஜின் குற்றச்சாட்டு பொய்யானது என எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. கூறினார்.

Update: 2020-05-29 22:33 GMT
தஞ்சாவூர்,

தி.மு.க. எம்.பி.க்கள் அளித்த மனுக்கள் போலியானது என்ற அமைச்சர் காமராஜின் குற்றச்சாட்டு பொய்யானது என எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. கூறினார்.

கலெக்டரிடம் மனுக்கள்

தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., சண்முகம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், ராமச்சந்திரன், அன்பழகன், கோவி.செழியன், டி.கே.ஜி.நீலமேகம், வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் நேற்று மாலை தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் கோவிந்தராவை சந்தித்து ‘ஒன்றிணைவோம் வா’ என்ற அமைப்பு மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 18 ஆயிரத்து 832 மனுக்களை அளித்தனர்.

பின்னர் வெளியே வந்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற அமைப்பின் கீழ் தமிழகத்தில் இருக்கக்கூடிய அடித்தள மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தி.மு.க.வை சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து நிர்வாகிகள் சிறந்த பணியை ஆற்றி வருகின்றனர். இந்த அமைப்பின் கீழ் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளுக்கு அப்பால் அரசு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை கோரிக்கை மனுக்களாக மக்கள் அளித்தனர்.

பொய்யான குற்றச்சாட்டு

அந்த மனுக்களை எல்லாம் சென்னையில் தலைமை செயலாளரை தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்து அளித்து அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை முறையாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடக்கத்தில் இருந்தே இருந்து வருகிறது.

இந்த கோரிக்கை மனுக்கள் எல்லாம் போலியானது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பொய்யான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். இது பொய் என்பதை நிரூபிப்பதற்காக அந்தந்த மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியிருக்கிறோம். அரசு குறைகளை களைவதற்கு பதிலாக தொண்டு செய்கிற எங்கள் மீதும், எங்கள் தலைவர் மீதும் குற்றம் சாட்டுவது தகுதிக்கு அழகல்ல.

3 அமைச்சர்கள் சண்டை

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் 3 அமைச்சர்கள் உள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லை. வாய்க்கால்களை யார் தூர் வாருவது? என்பது தொடர்பாக இவர்கள் சண்டையிட்டு கொள்கின்றனர். ஆனால் 10 மாதங்களுக்குள் திட்டம் போட்டு காவிரியில் புதிதாக கால்வாயை வெட்டி வருகிற ஜூன் 12-ந் தேதியே தண்ணீர் திறந்து விடுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்கிறார். மாவட்ட மக்களை காப்பாற்ற முயற்சி செய்யாமல் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்