திருப்பூரில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடத்திற்கான பணிகள் தொடக்கம்

திருப்பூரில் ரூ.336 கோடியே 96 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள அரசு மருத்துவகல்லூரி அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2020-05-29 22:13 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பின்னலாடை தொழில் உள்பட ஏராளமான தொழில்களுக்கு பிரசித்தி பெற்ற மாவட்டம் ஆகும். இதன் காரணமாக இங்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்கள் என பல பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக தினமும் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளியாக சிகிச்சை பெற ஏராளமானவர்கள் வருகிறார்கள்.

மற்ற மாவட்டங்களை விட திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகமாக இருக்கும். இருப்பினும் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால், உடனே திருப்பூரில் இருந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் மாற்றப்படும் நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் புதியதாக அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் சார்பில் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.

ரூ.337 கோடி செலவில்...

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 18-ந் தேதி, காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் மாவட்டம் நல்லூர் மண்டலம் தாராபுரம் ரோட்டில் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில், 11.28 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.336 கோடியே 96 லட்சம் செலவில் இந்த புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதற்கட்ட பணிகள்

தற்போது இந்த மருத்துவ கல்லூரிக்கான பணிகள் கொரோனா பாதிப்பின் காரணமாக அறிவிப்பு வெளியானதில் இருந்து நடைபெறாமல் இருந்து வந்தது. இதனால் இந்த பணிகள் கிடப்பில் போடப்படும் என பலரும் கவலையடைந்தபடி இருந்தனர். ஆனால் கல்லூரி கட்டிடம் அமைக்கப்படுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது கல்லூரி கட்டிடங்கள் கட்டுவதற்கான அஸ்திவாரம் தோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. இந்த மருத்துவ கல்லூரிக்காக மத்திய அரசு சார்பில் ரூ.195 கோடியும், தமிழக அரசு சார்பில் ரூ.141 கோடியே 96 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த பணிகளை முடிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்