சிவகிரியில் மூதாட்டியின் கழுத்தில் அரவாளால் வெட்டி நகை பறிப்பு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு

சிவகிரியில் மூதாட்டியின் கழுத்தில் அரிவாளால் வெட்டி மர்மநபர்கள் நகையை பறித்துச் சென்றனர்.

Update: 2020-05-29 21:30 GMT
சிவகிரி, 

தென்காசி மாவட்டம் சிவகிரி குமாரபுரம் 2-வது சந்து நாகமணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோமதி சேனையர் மனைவி ராமர் அம்மாள் வயது (வயது 80). இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். கணவர் இறந்துவிட்டதால் ராமர் அம்மாள் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் இவருடைய வீடு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ராமர் அம்மாள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மேலும் அவர் அணிந்திருந்த சங்கிலி, கம்மல் ஆகியவையும் காணாதது கண்டு அதிர்ச்சியுற்றனர். இதுகுறித்து சிவகிரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் புளியங்குடி துணை சூப்பிரண்டு சக்திவேல், சிவகிரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் வந்தனர். ராமர் அம்மாளை மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ராஜபாளையம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நெல்லையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. நெல்லையில் இருந்து கை ரேகை பதிவு நிபுணர் “அகஸ்டா‘ மற்றும் தடய அறிவியல் துறை நிபுணர்களும் வந்து ஆய்வு செய்தனர்.

இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்தார். போலீசார் விசாரணையில், நள்ளிரவு 12 மணியளவில் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து மது அருந்தி இருப்பதும், பின்னர் ராமர் அம்மாள் வாயில் துணியை திணித்து கழுத்தில் அரிவாளால் வெட்டி நகை மற்றும் கம்மல் ஆகியவற்றை பறித்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது. மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்