லாலாபேட்டை அருகே காலிக்குடங்களுடன் குடிநீர்கேட்டு பொதுமக்கள் மறியல்
லாலாபேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
லாலாபேட்டை,
லாலாபேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலைமறியல்
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே கண்ணமுத்தம்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால் பலர் விவசாய தோட்டங்களில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை பஞ்சப்பட்டி பழைய ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த பஞ்சப்பட்டி வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அதிகாரி அன்புராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தம்பி, லாலாபேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டு, உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.