அரசின் முன் அனுமதியின்றி சேலத்துக்கு வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் போலீஸ் நடவடிக்கை; மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

அரசின் முன் அனுமதியின்றி சேலத்துக்கு வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-05-29 03:28 GMT
சேலம்,

கடந்த மாதம் 27-ந் தேதி முதல் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்தவர்கள் பற்றிய விவரங்கள் எல்லைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள போலீசாரின் சோதனை சாவடியில் உள்ள ஆவணங்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு வருகிறது. பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் பகுதியில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்ட பின்னரே சேலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மாநகராட்சி சார்பில் 4 மண்டலங்களிலும் பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் பொதுமக்களிடம் இருந்து பெறும் தகவல்களின் அடிப்படையில் கள ஆய்வு செய்து, உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தும் பகுதிகளுக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்கின்றனர். பரிசோதனையின் முடிவில் நோய் தொற்று இல்லை என்பதனை உறுதி செய்த பின்னர், அவர்களது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களை 14 நாட்கள் அவர்களது வீடுகளில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசின் முன் அனுமதியின்றி சேலத்திற்கு வருபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி தனிமைப்படுத்தும் பகுதியில் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியவர்கள் மீதும் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே பொதுமக்கள் தங்கள் குடும்பங்கள் அல்லது தங்கள் வசிக்கும் பகுதியில் அரசின் முன் அனுமதியின்றி வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி அலுவலகங்களிலோ, மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் போலீசாரிடம் தெரிவித்து, முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்