குமரியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 65 நாட்களில் 7 ஆயிரத்து 955 வழக்கு பதிவு கலெக்டர் தகவல்

குமரியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 65 நாட்களில் 7 ஆயிரத்து 955 வழக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-29 01:33 GMT
நாகர்கோவில், 

குமரியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 65 நாட்களில் 7 ஆயிரத்து 955 வழக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு மீறல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

* நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இதுவரை 13 ஆயிரத்து 793 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது இதில் குமரி மாவட்டத்தில் இருந்த 16 பேர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 49 பேர் என மொத்தம் 65 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 13 ஆயிரத்து 320 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என்றும், மீதம் உள்ள நபர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

* கொரோனா நோய்த் தொற்றில் இருந்து 27 பேர் முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 31 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

* குமரி மாவட்டத்தில் மொத்தம் 377 நபர்கள் வீட்டு தனிமையில் இருந்துவருகின்றனர்.

* குமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் கடந்த 65 நாட்களில் 7 ஆயிரத்து 955 வழக்குகளும், 5 ஆயிரத்து 915 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தீவிர சோதனை

வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்கள் குமரி மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வீட்டு தனிமையில் வைக்கப்படுகின்றன.

மேலும் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் உடனே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் குமரிமாவட்டத்தில் நோய்தொற்று பரவுவதை தடுக்க முடிகிறது.

தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் சிலரிடம் ஆய்வு மேற்கொண்ட போது, அவர்கள் முறையான இ -பாஸ் பெறாமல் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்போடு அரசு கண்காணிப்பு நடவடிக்கைகளை தவிர்த்து குமரி மாவட்டத்திற்குள் நுழைந்தது கண்டுபிடிக்கபட்டு உள்ளது.

கட்டுப்பாட்டு அறை

அவ்வாறு வருகிறவர்களால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவர்களுக்கு நோய்த்தொற்று இருந்தால், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் உட்பட சுற்று வட்டார மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்படும். இது போன்ற செயலுக்கு குமரிமாவட்ட மக்கள் ஒத்துழைப்பு வழங்க கூடாது.

வெளியிடங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வருபவர்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் கட்டுப்பாட்டு அறை எண் 1077-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்