கன்னியாகுமரி அருகே ரூ.36¼ கோடியில் 480 வீடுகளுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி அருகே ரூ.36¼ கோடியில் 480 வீடுகளுடன் கூடிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

Update: 2020-05-29 00:55 GMT
கன்னியாகுமரி, 

கன்னியாகுமரி அருகே ரூ.36¼ கோடியில் 480 வீடுகளுடன் கூடிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். விழாவில் தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி அருகே பால்குளம் பகுதியில் தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கும் குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.36 கோடியே 24 லட்சத்தில் 480 வீடுகளுடன் கூடிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள புதிய வீடுகளை தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

தளவாய்சுந்தரம் பங்கேற்பு

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் நேற்று காலை 10.50 மணிக்கு நடந்த இந்த காணொலி காட்சி நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

பின்னர் தளவாய்சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள பால்குளம் நியூ பறக்கின்கால் காலனி பகுதிக்கு சென்றனர். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினார்கள்.

வெளியேறினர்

நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் ரிஷப், மாவட்ட ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜாண்தங்கம், குமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்றுதாஸ், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பேராசிரியர் நீலபெருமாள், குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரேசன், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் ஜெசிம், கொட்டாரம் பேரூர் செயலாளர் ஆடிட்டர் சந்திரசேகரன், மாவட்ட இளைஞர் பாசறை இணைசெயலாளர் பாலமுருகன், அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் ராஜபாண்டியன், ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம், அ .தி.மு.க. நிர்வாகிகள் வக்கீல் ராஜேஷ், பாலன், லீன், பஞ்சாயத்து தலைவர்கள் சுடலையாண்டி, இசக்கிமுத்து, யூனியன் துணைத்தலைவர் சண்முகவடிவு, ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வசந்தகுமார் எம்.பி., ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோர் வந்தனர். அப்போது அவர்கள், மக்கள் பிரதிநிதிகளான தங்களை நிகழ்ச்சிக்கு அழைத்துவிட்டு மேடையில் இடம் தராமல் பார்வையாளர் வரிசையில் அமரும்படி கூறுவதா? என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது.

மேலும் செய்திகள்