கோடியக்கரை சரணாலயத்தில் நாய்களிடம் இருந்து தப்பிக்க கடலில் விழுந்து தத்தளித்த மான்
கோடியக்கரை சரணாலயத்தில், நாய்களிடம் இருந்து தப்பிக்க கடலில் விழுந்து தத்தளித்த மானை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
வேதாரண்யம்,
கோடியக்கரை சரணாலயத்தில், நாய்களிடம் இருந்து தப்பிக்க கடலில் விழுந்து தத்தளித்த மானை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
வனவிலங்கு சரணாலயம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளி மான்கள், வெளிமான்கள், குதிரை, நரி, முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
தற்போது கோடைக்காலம் என்பதால் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடும் வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் இந்த சரணாலயத்தில் உள்ள மான்கள் தண்ணீர் தேடி பல்வேறு இடங்களுக்கு செல்கின்றன.
கடலில் தத்தளித்த மான்
இந்த நிலையில் நேற்று சரணாலயத்தை ஒட்டி உள்ள சவுக்கு தோப்பு அருகே கடற்கரையோரம் புள்ளி ஆண் மான் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது காட்டில் உள்ள நாய்கள் அந்த மானை விரட்டியது.
நாய்களிடம் இருந்து உயிர் தப்பிப்பதற்காக ஓடிய மான் அருகில் உள்ள கடலில் எதிர்பாராதவிதமாக விழுந்தது. அப்போது கடலில் வீசிய அலையால் அந்த மான் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது. இதில் கடலில் தத்தளித்த மான் தண்ணீரில் நீந்தி கொண்டு இருந்தது.
பத்திரமாக மீட்டனர்
அந்த நேரத்தில் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய அந்த பகுதி மீனவர்கள் கடலுக்குள் மான் தத்தளித்துக்கொண்டு இருப்பதை பார்த்தனர். இதனையடுத்து அந்த மானின் அருகில் படகை திருப்பி சென்ற மீனவர்கள், மானை மீட்டு படகில் ஏற்ற முயன்றனர்.
அது முடியாமல் போனதால் மானின் கொம்பை ஒரு மீனவர் பிடித்துக்கொள்ள படகை மெதுவாக ஓட்டியபடி மானை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனே அந்த மான் மீண்டும் காட்டுக்குள் துள்ளி குதித்தபடி சென்றது. மானை மீட்ட மீனவர்களை அந்த பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.