கொரடாச்சேரியில் ஊதிய உயர்வு கேட்டு மனு அளிக்கும் போராட்டம்; 35 பேர் மீது வழக்கு

கொரடாச்சேரியில் ஊதிய உயர்வு கேட்டு மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2020-05-28 23:45 GMT
கொரடாச்சேரி, 

கொரடாச்சேரியில் ஊதிய உயர்வு கேட்டு மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மனு அளிக்கும் போராட்டம்

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தை ரூ.2,500-ல் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு ஊராட்சிகள் மூலமாகவே ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை ரூ.2,600-ல் இருந்து ரூ.3,600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

மாதந்தோறும் 5-ந் தேதி ஊதியம் வழங்க வேண்டும். 2010-ம் ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்ட தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

கொரடாச்சேரியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் ஊராட்சி தூய்மை காவலர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்து போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் தேவராஜனிடம் மனு வழங்கினர்.

35 பேர் மீது வழக்கு

ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் போராட்டம் நடத்தியதாக கூறி மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர் காமராஜ் உள்பட 35 பேர் மீது கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் மத்திய அரசின் புதிய மின் கொள்கையினை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு விவசாய சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி உள்பட 25 பேர் மீதும் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்