வெளிமாநிலங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்தது

வெளிமாநிலங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

Update: 2020-05-28 22:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் முதலில் 27 பேர் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து 15 நாட்களாக எந்தவித புதிய தொற்றும் ஏற்படாமல் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து, பச்சை மண்டலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் மராட்டியம், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிக பணம் கொடுத்து ஏராளமாக தனியார் வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு வரத் தொடங்கினர். அதன்படி கடந்த சில வாரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தூத்துக்குடிக்கு வந்தனர்.

இவர்களை தூத்துக்குடி மாவட்ட எல்லையில் வைத்து கொரோனா பரிசோதனை நடத்தி, 9 தனிமை முகாம்களில் தங்க வைத்தனர். அவர்களில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரையிலும் 187 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. அதன்படி கடந்த 25-ந்தேதி 81 பேர் தூத்துக்குடிக்கு வந்தனர். நேற்று முன்தினமும், நேற்றும் தலா 10 பேர் மட்டுமே தூத்துக்குடிக்கு வந்துள்ளனர்.

அவர்களை தூத்துக்குடியில் உள்ள 3 கல்லூரிகளில் உள்ள தனிமை முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தொற்று இல்லாததால், அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். தற்போது தனிமை முகாம்களில் 10 பேர் மட்டுமே தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

வெளிமாநிலத்தில் இருந்து தனியார் வாகனங்களில் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், நோய் தொற்றும் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் மும்பையில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கப்பட்டால், மீண்டும் பலர் தூத்துக்குடிக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்