விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தபால்துறை சேமிப்பு திட்டத்தில் ஜூன் மாதம் வரை முதலீடு செய்ய அனுமதி அதிகாரி தகவல்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தபால் துறையின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய ஜூன் மாத இறுதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தபால்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-05-28 05:10 GMT
விருதுநகர், 

தபால்துறையில் அமலில் உள்ள மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் வங்கிகளை விட கூடுதல் வட்டி தரப்படுவதால் பணி ஓய்வு பெற்றவர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்ய முன்னுரிமை தரும் நிலை இருந்து வருகிறது. தற்போது ரிசர்வ் வங்கி சேமிப்புகளுக்கான வட்டியை குறைத்துவிட்ட போதிலும் தபால்துறை இத்திட்டத்தின் கீழ் 7.4 சதவீதம் வட்டி வழங்கி வருகிறது.

இந்தநிலையில் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய பலன்களை கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெற்றனர். தபால்துறையின் விதிமுறைப்படி ஓய்வு பெற்ற 30 நாட்களில், தபால்துறையின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

அனுமதி மறுப்பு

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஓய்வூதிய பலன்கள் தாமதமாக அளிக்கப்பட்டதாலும், ஊரடங்கு அமலில் இருந்ததாலும் 30 நாட்களுக்குள் முதலீடு செய்யாத காரணத்தை காட்டி தற்போது முதலீடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

தங்களுக்கு ஊரடங்கு அமலில் இருப்பதால் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என ஓய்வூதியர் பலர் முறையிட்டனர். அதன்பேரில் மத்திய நிதி அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் விருப்ப ஓய்வு பெற்ற 55 வயது முதல் 60 வயது உள்ளவர்கள் தபால் துறையின் மூத்த குடிமக்கள் முதலீட்டு திட்டத்தில் ஜூன் மாதம் 30-ந்தேதி வரை முதலீடு செய்யலாம் என உத்தரவிட்டது. ஆனாலும் தபால் அலுவலகங்களில் தங்களுக்கு இதற்கான உத்தரவு வரவில்லை என தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.

அணுகலாம்

தற்போது மதுரை தபால் சேவை துறை உதவி இயக்குனர் பாண்டியராஜன், விருதுநகர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைமை தபால் அலுவலகங்களுக்கும் இதுதொடர்பான தகவல் அனுப்பி வைத்துள்ளார். அதில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் ஜூன் மாத இறுதிக்குள் தபால் அலுவலகங்களை அணுகி மூத்த குடிமக்கள் முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யலாம். தபால்துறை இதற்கு விதிவிலக்கு அளித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்