கரூரில் சிக்கி தவித்த பீகார்-ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
கரூர் மாவட்டம், ஆத்தூர் அருகே மாங்காசோளிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.
நொய்யல்,
கரூர் மாவட்டம், ஆத்தூர் அருகே மாங்காசோளிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த 10 பேரும், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 பேரும் என மொத்தம் 14 பேர் வேலை பார்த்து வந்தனர்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இந்த நிறுவனம் மூடப்பட்டது. இதனால் அவர்களுக்கு உணவு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் 14 பேரும் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவு செய்து புறப்பட்டனர்.
இதுகுறித்து அறிந்த வருவாய்துறையினர் அவர்களை ஆத்தூரில் உள்ள ஒரு சமுதாய கூடத்தில் தங்க வைத்து, உணவுகளை வழங்கி வந்தனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் 14 பேரையும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து 14 பேரையும் நேற்று ஒரு பஸ்சில் திருச்சி ரெயில் நிலையத்திற்கு, மண்மங்கலம் தாசில்தார் செந்தில்குமார் வழியனுப்பி வைத்தார். இதையடுத்து அவர்களை திருச்சியில் இருந்து பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்திற்கு திருச்சி வருவாய்த்துறையினர் அனுப்பி வைத்தனர்.