‘’ஒரு பயணி மட்டுமே பயணிக்க வேண்டும்‘’ புதிய கட்டுப்பாட்டால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

ஒரு பயணி மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.

Update: 2020-05-28 04:40 GMT
கரூர், 

ஒரு பயணி மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு, மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். இந்தநிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, புதிய கட்டுப்பாடுகளுடன் ஆட்டோக்கள் ஓட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 2 மாதத்திற்கும் மேலாக வாழ்வாதாரம் இழந்து தவித்த ஆட்டோ டிரைவர்கள், ஆட்டோக்களை இயக்க தயாராகினர். பஸ் நிலையம், ரெயில் நிலையம் செயல்படாததாலும், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதாலும், ஏற்கனவே ஆட்டோ டிரைவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆட்டோவில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளுடன் ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

கோரிக்கை

இதனால் ஆட்டோக்களுக்கு சவாரி கிடைக்காத நிலை உள்ளது. மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானாலும் கூட ஒருவரை துணைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற நிலையில், ஒரு பயணியை மட்டுமே அழைத்துச்செல்ல வேண்டும் என அரசு அறிவித்துள்ளது, ஆட்டோ டிரைவர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.

மேலும், அவ்வப்போது கிருமிநாசினியை பயன்படுத்தி ஆட்டோக்களை சுத்தம் செய்ய வேண்டும் என்பதும் அவர்களுக்கு கூடுதல் செலவினமாகவே உள்ளது. எனவே ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விதிகளை தளர்த்தி தொழில் செய்ய உதவ வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்