மேலும் 5 பேருக்கு பாதிப்பு: கொரோனா தொற்று 39 ஆனது

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று மேலும் 5 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-27 23:58 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி 4-ம் கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

புதுச்சேரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஜிப்மர் மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகப்பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஜிப்மரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாகியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காரைக்கால், ஏனாமில் யாருக்கும் கொரோனா தொற்றால் பாதிப்பு இல்லை.

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே 34 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மேலும் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது தர்மாபுரி, சோலைநகர், ரெட்டியார்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவரும் முத்தியால்பேட்டையை சேர்ந்த 2 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆவார்கள். இதனால் புதுச்சேரியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் மரக்காணத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவரும், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 4 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் ஜிப்மர் வளாகத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தவர்கள்.

வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து பலர் தகவல்களை அரசுக்கு தெரிவிக்காமல் உள்ளனர். எனவே தங்கள் தொகுதியில் யாராவது வெளி மாநிலம் சென்று வந்திருந்தால் பக்கத்து வீட்டினர் கூட அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம். தவறான தகவல்களை கொடுத்து இ-பாஸ் பெற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்