கோவில்களை திறக்க கோரி இந்து முன்னணியினர் நூதன போராட்டம்

கோவில்களை திறக்க கோரி இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-27 05:55 GMT
புதுக்கோட்டை, 

கோவில்களை திறக்க கோரி இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூதன போராட்டம்

கொரோனா ஊரடங்கின் காரணமாக இந்து கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. மேலும் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாமல் உள்ளனர். ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் மூடப்பட்டிருக்கும் இந்து கோவில்கள் அனைத்தையும் திறக்க கோரி இந்து முன்னணியினர் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் திருவப்பூர் முத்து மாரியம்மன் கோவில், திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் முன்பு இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டனர். இதில் மாவட்ட தலைவர் கற்பக வடிவேல் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மணமேல்குடி

இதேபோல் மணமேல்குடி வடக்கூர் அம்மன்கோவில், சிவன்கோவில், ஜெகதீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில் இந்து முன்னணி ஒன்றிய தலைவர் கந்தசாமி தலைமையில் தோப்புக்கரணம் போராட்டம் நடைபெற்றது.

கறம்பக்குடி

இதேபோல கறம்பக்குடி திருமணஞ்சேரி சுகந்த பரி மளேஸ்வரர், புதுப்பட்டி சுனையிலம்மன் ஆகிய கோவில்களில் இந்து முன்னணி நகர தலைவர் கருப்பையா தலைமையில் நிர்வாகிகள் முட்டிப்போட்டு நூதன போராட்டம் நடத்தினர். அப்போது மக்கள் நலனுக்காக கோவில்களை திறக்க கோரியும், மக்களை காக்க வேண்டியும் முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதேபோல் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவில் முன்பு, மீமிசல் கல்யாணராமன் சுவாமி கோவில் முன்பு கோவிலை திறக்க கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் புதுக்கோட்டை மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்