மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றதை கண்டித்த மளிகைக்கடைக்காரருக்கு கத்திக்குத்து 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

திருப்பூரில் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றதை கண்டித்த மளிகைக்கடைக்காரரை கத்தியால் குத்திய 4 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-27 05:46 GMT
திருப்பூர், 

திருப்பூர் பாளையக்காடு சூர்யா காலனியை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 26). இவர் அந்தப்பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை அந்த வீதியில் 4 சிறுவர்கள் 5 பேர் 2 மோட்டார்சைக்கிளில் அதிவேகமாக சென்றுள்ளனர். மேலும் மோட்டார்சைக்கிளில் அதிக சத்தம் வரும் வகையில் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த ராஜேஷ் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் அந்த சிறுவர்களை தடுத்து நிறுத்தி கண்டித்து அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் ஏற்கனவே எச்சரித்து அனுப்பிய 5 பேர் மீண்டும் சூர்யா காலனிக்கு வந்துள்ளனர். அங்கு நின்று கொண்டிருந்த ராஜேசை கத்தி, பாட்டிலால் குத்தினர். மேலும் கல்லால் சரமாரியாக 5 பேரும் அவரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் ராஜேசின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ராஜேசை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

5 பேர் கைது

இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். இதில் சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்தனர்.

விசாரணையில் என்.ஆர்.கே.புரத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ்(21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு கீழ் உள்ள 4 பேர் என்பதும், அவர்களில் 2 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்