மாயனூர் கதவணை காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மீன்பிடிக்கும் இளைஞர்கள்
மாயனூர் கதவணை காவிரி ஆற்றில் பரிசலில் சென்று இளைஞர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
கரூர்,
மாயனூர் கதவணை காவிரி ஆற்றில் பரிசலில் சென்று இளைஞர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
கதவணை
கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே 1.5 டி.எம்.சி. தண்ணீர் தேக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டு உள்ளது. இங்கு மேட்டூர் அணை, அமராவதி அணை, பவானிசாகர் அணை மற்றும் நொய்யல் ஆற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, கிளை வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றில் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மற்ற அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் மாயனூர் கதவணையில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் அப்பகுதி காவிரி ஆற்றில் பலர் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உடனடி விற்பனை
கரூர் மாவட்டத்தில் ஆடு, கோழி இறைச்சிகளின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் மீன்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாயனூர் கதவணைக்கு வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர். தற்போது கோடை காலம் என்பதாலும், ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாலும், பலர் மாயனூர் காவிரி ஆற்றுக்கு வந்து குளித்துவிட்டு, அங்கிருந்து மீன்களை வாங்கி செல்கின்றனர். இதனால் கதவணையில் பிடிக்கும் மீன்கள் உடனடியாக விற்பனையாகிறது.
மீன்களின் வகையை பொறுத்து கிலோ ரூ.50 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலர் கதவணை பகுதியில் பரிசலில் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இது குறித்து மீன்பிடி தொழிலாளி ஒருவர் கூறுகையில், மாயனூர் கதவணையில் பிடிக்கும் மீன்களை அதிக அளவில் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். அவர்கள் கண் முன்பே மீன்களை பிடித்து விற்பனை செய்யப்படுவதாலும், மற்ற பகுதிகளில் விற்கப்படும் மீன்களை காட்டிலும் விலை குறைவாக உள்ளதாலும் வாங்கிச்செல்கின்றனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும், என்றார்.