வீட்டிலேயே இயற்கை முறையில் குழந்தை பெற்றதால் போலீசார் கைது செய்ய முயற்சிப்பதாக பெரம்பலூர் தம்பதி குற்றச்சாட்டு

வீட்டிலேயே இயற்கை முறையில் குழந்தை பெற்றதால் போலீசார் கைது செய்ய முயற்சிப்பதாக பெரம்பலூர் தம்பதி குற்றஞ்சாட்டி உள்ளனர்.

Update: 2020-05-27 05:32 GMT
பெரம்பலூர், 

வீட்டிலேயே இயற்கை முறையில் குழந்தை பெற்றதால் போலீசார் கைது செய்ய முயற்சிப்பதாக பெரம்பலூர் தம்பதி குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவர்கள் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீட்டில் பிரசவம்

பெரம்பலூர் துறைமங்கலம் நியூ காலனி 2-வது குறுக்கு தெருவில், வாடகை வீட்டில் சதீஷ்குமார் என்பவர், மனைவி பேபி (வயது 35) மற்றும் குடும்பத்தினருடன் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான பேபிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டிலேயே பிரசவம் நடந்து ஆண் குழந்தை பிறந்தது.

கொரோனா வைரஸ் பரவும் இந்த காலகட்டத்தில் வீட்டில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று எதுவும் இருக்குமோ என்று சுகாதாரத்துறையினர், பேபியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று ரத்த பரிசோதனை செய்தனர். பரிசோதனையில், அவருக்கு ரத்தம் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதனால் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து ரத்தம் ஏற்றிக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். அதற்கு பேபி மறுத்ததாக கூறப்படுகிறது.

தப்பி ஓட்டம்

அதைத்தொடர்ந்து பெரம்பலூர் போலீசார், பேபி குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேபி குடும்பத்தினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார், பேபியை வலுக்கட்டாயமாக சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர்.

ஆனால், பேபி தனது கணவர், குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் இருந்து வெளியேறி தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், பேபி மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பேபி வசித்த வீட்டை பூட்டிய சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று ‘ஸ்டிக்கர்‘ ஒட்டினர்.

இந்தநிலையில், குழந்தையுடன் பேபி மற்றும் அவரது கணவர் சதீஷ்குமார் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், எனது மனைவியும், குழந்தையும் நலமாக உள்ளனர். ஆனாலும் சுகாதாரத்துறையினர் போலீசாரை வைத்து பொய் வழக்கு போட்டு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு எங்களை மிரட்டி வருகிறார்கள். ஜனநாயக நாட்டில் வீட்டில் ஒரு பெண்ணுக்கு இயற்கையான முறையில் பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பிறந்தது குற்றமா? என்று சதீஷ்குமாரும், அதிகாரிகள் மிரட்டியே நல்லாயிருந்த உடலையும் மோசமாக்கி விட்டதாக பேபியும் கூறுவது போல் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோ வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்