தென்காசி, நெல்லையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசி, நெல்லையில் இந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி,
தென்காசி, நெல்லையில் இந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
தற்போது பல்வேறு தளர்வுகள் அரசால் அளித்த நிலையில் கோவில்களிலும் சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் மற்றும் தோப்புக்கரணம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
30 பேர் கைது
இந்த நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் அவர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவா, செயற்குழு உறுப்பினர் முருகன், தென்காசி நகர தலைவர் இசக்கிமுத்து, பொதுச் செயலாளர் நாராயணன், செயலாளர் பாலாஜி, பா.ஜ.க. நிர்வாகிகள் திருநாவுக்கரசு, சங்கர சுப்பிரமணியன், மகேஸ்வரன் உள்பட 30 பேர் கலந்து கொண்டனர்.
அவர்களை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் கைது செய்தார். அவர்கள் அனைவரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
நெல்லை
நெல்லை டவுன் சந்திப்பிளையார்கோவில் முன்பு இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கிவைத்தார். மாவட்ட செயலாளர்கள் சிவா, சுடலை, செல்வராஜ், பா.ஜனதா வக்கீல் அணி மாநில செயலாளர் பாலாஜி கிருஷ்ணசாமி, மாவட்ட துணை தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் வள்ளியூரில் இந்து முன்னணி நெல்லை கோட்டத்தலைவர் தங்க மனோகர் தலைமையில் நிர்வாகிகள் தோப்புக்கரணம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.