புதிய மின்சார சட்டத்தை கண்டித்து நெல்லை - தென்காசியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

புதிய மின்சார சட்டத்தை கண்டித்து நெல்லை, தென்காசியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2020-05-27 04:03 GMT
நெல்லை, 

புதிய மின்சார சட்டத்தை கண்டித்து நெல்லை, தென்காசியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய மின்சார சட்டத்தால் தமிழக விவசாயிகள் பெற்று வரும் இலவச மின்சார திட்டத்திற்கு ஆபத்து உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறி மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நெல்லை கொக்கிரகுளம், பாளையங்கோட்டை சமாதானபுரம், பேட்டை, சாந்திநகர் ஆகிய 4 இடங்களில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்பு

நெல்லை கொக்கிரகுளம் மின்சார வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இவர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் போட்டனர்.

அம்பை-வடக்கன்குளம்

சேரன்மாதேவியில் தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாக்யராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அம்பையில் நகர காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்பையில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 4 பேருக்கு மேல் கூடியதாக காங்கிரஸ் நகர தலைவர் முருகேசன் உள்பட 12 பேரை அம்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தார்.

வள்ளியூர் வட்டார காங்கிரஸ் சார்பில் வடக்கன்குளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் வெங்கடேஷ் தனராஜ் தலைமை தாங்கினார். வள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் சுயம்புலிங்கதுரை முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் தகவல் தொழில்நுட்பம் வழக்கறிஞர் சிங்கராஜா, வடக்கன்குளம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மிக்கேல் ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மூலைக்கரைப்பட்டி- சுரண்டை

மூலைக்கரைப்பட்டி தபால் நிலையம் முன்பு ரூபி மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில ஓ.பி.சி. பொதுச் செயலாளர் ஜெஸ்கர் ராஜா, காங்கிரஸ் பேச்சாளர் மாசிலாமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுரண்டையில் அண்ணா சிலை, சார் பதிவாளர் அலுவலகம், பொட்டல் மாடசாமி கோவில் திடல் மற்றும் காமராஜர் வணிக வளாகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனிநாடார் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால் முன்னிலை வகித் தார். தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக பிரிவு மாநில பொதுச்செயலாளர் சிங்கராஜ் வரவேற்றார். நகர இலக்கிய அணி தலைவர் கந்தையா நன்றி கூறினார்.

தொடர்ந்து கடையாலுருட்டியில் மேலநீலீதநல்லூர் வட்டார தலைவர் முருகையா தலைமையிலும், சாம்பவர்வடகரையில் செங்கோட்டை கிழக்கு வட்டார தலைவர் ரத்தினம் மற்றும் நகர தலைவர் முருகன் தலைமையிலும், வீராணத்தில் ஆலங்குளம் வடக்கு வட்டார தலைவர் முஸ்தபா தலைமையில் முருகையா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விக்கிரமசிங்கபுரம்- வள்ளியூர்

விக்கிரமசிங்கபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் வின்சென்ட் மற்றும் பலர் கலந்துகொண்டனர். சிவந்திபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி.பி.துரை, பகுதி தலைவர் செல்வம், அடையகருங்குளம் பகுதி தலைவர் ஆதிமூலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வள்ளியூரில் நகர காங்கிரஸ் தலைவர் சீராக் இசக்கியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளம் தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் குமார், செயற்குழு உறுப்பினர் ஜெயசிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திசையன்விளையில் தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகர காங்கிரஸ் தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் விஜயபெருமாள், மேலிட பொறுப்பாளர் பால்ராஜ் உள்பட 15 பேரை திசையன்விளை போலீசார் கைது செய்தனர்.

மானூர் தபால் அலுவலகத்தின் முன்பு வட்டார காங்கிரஸ் விவசாயிகள் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநகர் காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் அழகை மாரியப்பன் தலைமை தாங்கினார். விவசாய அணி செயலாளர் அய்யாத்துரை, இளைஞர் காங்கிரஸ் வட்டார துணை தலைவர் ஜெயபால், வட்டார நிர்வாகி சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தென்காசி- செங்கோட்டை

தென்காசி ஹவுசிங் போர்டு காலனியில் நகர தலைவர் காதர் மைதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பு செயலாளர் அகிலாண்டம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

செங்கோட்டை அஞ்சல் நிலையம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையம் ஆகிய இரு இடங்களில் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவல் மாமன்னர் பூலித்தேவன் நினைவு மாளிகை முன்பு மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி தலைவர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புளியங்குடியில் மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகர காங்கிரஸ் தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கோமதிநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்