தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி பலி

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2020-05-27 02:28 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை அருகே உள்ள பாலதோட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயப்பா (வயது 70). விவசாயி. ஆடு, மாடுகள் வளர்த்து வந்தார். இவர் வளர்த்து வந்த மாடுகளை நேற்று முன்தினம் மேய்ச்சலுக்காக அங்குள்ள வனப்பகுதியில் விட்டு இருந்தார். இந்த மாடுகள் மாலை வீடு திரும்பி வரவில்லை. இதனால் மாடுகளை தேடி திம்மராயப்பா நேற்று காலை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றார். அதன் பிறகு திம்மராயப்பாவும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை தாலுகா உப்ரானப்பள்ளி என்ற இடத்தில் புளியந்தோப்பு ஒன்றில் திம்மராயப்பா யானை மிதித்து இறந்து கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அதில் இறந்தது திம்மராயப்பா தான் என்று உறுதி செய்த அவர்கள் இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வனப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை திம்மராயப்பாவை தாக்கி துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற மாவட்ட வன அலுவலர் பிரபு, தேன்கனிக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், வனச்சரகர்கள் சுகுமார், நாகராஜ் ஆகியோர் திம்மராயப்பாவின் உடலை பார்வையிட்டனர். மேலும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்கள். மேலும் முதல் கட்டமாக திம்மராயப்பாவின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் ரூ.50 ஆயிரத்துக்கான நிதியை மாவட்ட வன அலுவலர் பிரபு வழங்கினார்.

இதேபோல தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தின்னூரை சேர்ந்தவர் விவசாயி பெத்த வெங்கடப்பா (85). இவரை காட்டு யானை ஒன்று நேற்று தாக்கியது. பலத்த காயம் அடைந்த இவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்