மதுரையில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு தனி ரெயில்: வெளிமாநில தொழிலாளர்கள் 156 பேர் குமரியில் இருந்து பஸ்களில் புறப்பட்டனர்
வெளிமாநில தொழிலாளர்களுக்கு மதுரையில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு தனி ரெயில் இயக்கப்படுகிறது.
நாகர்கோவில்,
வெளிமாநில தொழிலாளர்களுக்கு மதுரையில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு தனி ரெயில் இயக்கப்படுகிறது. அந்த ரெயிலில் செல்லக்கூடிய தொழிலாளர்கள் 156 பேர் குமரியில் இருந்து மதுரைக்கு 5 பஸ்களில் புறப்பட்டனர்.
வெளிமாநில தொழிலாளர்கள்
குமரி மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து குமரி மாவட்ட நிர்வாகத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி ரெயில் மூலம் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 957 தொழிலாளர்களும், ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள் 334 பேரும், ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் 554 பேரும், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 37 பேரும், ஒடிசா மாநில தொழிலாளர்கள் 363 பேரும் நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை, நெல்லை ரெயில் நிலையங்களில் இருந்து தனி ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
5 பஸ்களில் பயணம்
இந்தநிலையில் மத்திய பிரதேச மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் செல்வதற்காக 227 பேர் ஆன்லைன் மூலமாக நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் பத்மநாபபுரம் வருவாய் கோட்ட பகுதியைச் சேர்ந்த 144 பேர் 4 பஸ்கள் மூலமும்,
நாகர்கோவில் வருவாய் கோட்டத்தைச் சேர்ந்தவர்கள் 12 பேர் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஒரு பஸ் மூலமும் ஆக மொத்தம் 156 பேர் 5 பஸ்களில் நேற்று மதியம் மதுரை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 71 பேர் சொந்த ஊர் செல்ல வரவில்லை.
தனி ரெயிலில்...
நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டுச் சென்றவர்களை நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் வழியனுப்பி வைத்தார். முன்னதாக அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் உணவுப்பொட்டலம், தண்ணீர் பாட்டில் போன்றவையும் வழங்கப்பட்டன. பஸ்சில் புறப்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லும் உற்சாகத்தில் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மதுரை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு மத்தியபிரதேசத்துக்கு புறப்பட்டுச் சென்ற தனி ரெயிலில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.