கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு போராட்டம்

கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2020-05-27 00:38 GMT
உடுமலை, 

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி சில கட்டுப்பாட்டுகளுடன் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டு உள்ளன. டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. விமான சேவையும் தொடங்கியுள்ளது. ஆட்டோக்கள், வாகனங்கள் ஓடுகின்றன.

இந்த நிலையில் கொரோனாவை விரட்டும் வகையில் பக்தர்கள் வழிபட கோவில்களை திறக்க வேண்டும் என்று கோரி நேற்று இந்து முன்னணி சார்பில் உடுமலை மாரியம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர் கோவில், சிவசக்தி காலனி காளியம்மன் கோவில் உள்பட 20-க்கும் மேற்பட்ட கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போட்டு போராட்டம் நடத்தினர்.

தோப்புக்கரணம் போட்டனர்

உடுமலை மாரியம்மன் கோவில் முன்பு நடந்த போராட்டத்திற்கு இந்து முன்னணி தெற்கு மாவட்ட செயலாளர் வீரப்பன் தலைமை தாங்கினார். பப்பீஸ் முன்னிலை வகித்தார். இந்து கோவில்கள் முன்பு நடந்த போராட்டத்தில் இந்து முன்னணியினர் சமூக இடைவெளியை கடைபிடித்து தோப்புக்கரணம் போட்டு கோவில்களை உடனே திறக்கக்கோரி கோஷமிட்டனர்.

குடிமங்கலம்

இதுபோல் குடிமங்கலத்தை அடுத்த கொங்கல் நகரம் கிழக்கு விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில், ஈஸ்வரன் கோவில், விருகல்பட்டிபுதூர் ஓம் சக்தி விநாயகர் கோவில், விநாயகர் கோவில், சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில், அய்யம்பாளையம் புதூர் விநாயகர் கோவில்கள் முன்பு இந்து முன்னணியினர் நேற்று தோப்புக்கரண போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்து முன்னணி தெற்கு மாவட்ட செயலாளர் பூர்ணச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் உதயகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மடத்துக்குளம்

இதுபோல் மடத்துக்குளம் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் முன்பும் இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டும், சூடம் ஏற்றியும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மற்றும் நகரத்தலைவர் முருகேசு, நகரப்பொதுச்செயலாளர் சிங்காரம் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்