நாகை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டத்தில் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை கைவிட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை கைவிட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை
இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை கைவிட வலியுறுத்தி நாகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நாகை நகர தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரநாட்டார், மாவட்ட பொதுச் செயலாளர் ராமலிங்கம், நாகூர் நகர தலைவர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். நெசவாளர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதேபோல் நாகூர் மின்சார வாரியம் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் நவ்சாத் தலைமை தாங்கினார். இதில் மாநில விவசாய பிரிவு செயற்குழு உறுப்பினர் நிக்கோலஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிக்கல்
இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் கீழ்வேளூரில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி கீழ்வேளூர் தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், மின்சார வாரியம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜ், ராமதாஸ், கல்யாணம், அமிர்தராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
சீர்காழி
சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் கனிவண்ணன் தலைமை தாங்கினார். சீர்காழி காங்கிரஸ் கட்சி நகர தலைவர் லட்சுமணன், முன்னாள் வட்டார தலைவர் அறிவுடைநம்பி, எஸ்.சி.எஸ்.டி. பிரிவு நகர தலைவர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன் வரவேற்றார்.
குத்தாலம்
மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சரத்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் மூங்கில் ராமலிங்கம், நகர தலைவர் ராமானுஜம், நகர செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
வேளாங்கண்ணி
வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றிய வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
15 பேர் மீது வழக்கு
கொள்ளிடம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர், காங்கிரஸ் மேற்கு வட்டார தலைவர் ஞானசம்பந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர் படேல், நகர தலைவர் பிரகாசம், மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணையன் ஆகியோர் உள்பட 15 பேர் மீது கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.