மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-26 23:24 GMT
புதுச்சேரி,

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுவை அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தொடக்கத்தில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதே எண்ணிக்கை தொடர்ந்து நீடித்து வந்தது. இந்தநிலைமை கடந்த சில நாட்களாக தலைகீழாக மாறி விட்டது. அதாவது புதுவையில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் உயர்ந்து வருகிறது.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் நேற்று முன்தினம் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை சுகாதார துறை உறுதி செய்தது. அவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்தது. தற்போது ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்த 38 வயது பெண்ணுக்கும், அவரது மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பெண்ணின் கணவர் மூலம் இவர்களுக்கும் தொற்று இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் தவிர 12 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து இதுவரை 11 பேர் புதுச்சேரி திரும்பி உள்ளனர். அவர்களில் 7 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறைந்த மக்கள் தொகை கொண்ட நமது மாநிலத்தில் இதுபோல் எண்ணிக்கை உயர்வது கவலை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் கூறும்போது, ‘வைரஸ் தொற்றினால் ஒருவர் பாதிக்கப்பட்டால் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் பாதிப்படைவது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்