கபிஸ்தலம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை பிடிபட்டது
கபிஸ்தலம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை பிடிபட்டது.
கபிஸ்தலம்,
கபிஸ்தலம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை பிடிபட்டது.
முதலை புகுந்தது
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சருக்கை ஊராட்சி வடசருக்கை கிராமத்தில் மண்ணி ஆற்றுக்கு அருகில் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் நேற்று மாலை 7 அடி நீளம் உள்ள முதலை நடமாடியது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் ஜெகநாதன், வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனச்சரக அலுவலர் ஜோதிகுமார், வனவர் ரஞ்சிதா, வனக்காப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் வன ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று ஊருக்குள் புகுந்து அச்சுறுத்திய 7 அடி நீள முதலையை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.
பிடிபட்டது
இதில் வனத்துறையினர் வலையை பயன்படுத்தி முதலையை லாவகமாக பிடித்தனர். அப்போது ஊராட்சி உறுப்பினர்கள் ராஜா, மணி, பாலசுப்பிரமணியன், கோவிந்தராஜ், ரவி, ஊராட்சி செயலாளர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பிடிபட்ட முதலை கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் விடப்பட்டது. ஊருக்குள் இருந்த வாய்க்காலில் முதலை புகுந்தது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. முதலை பிடிபட்ட பின்னரே கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.