தஞ்சை மாவட்டத்தில் ஊராட்சி பெண் உறுப்பினர் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி

தஞ்சை மாவட்டத்தில் ஊராட்சி பெண் உறுப்பினர் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-26 22:25 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் ஊராட்சி பெண் உறுப்பினர் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த 2 பேர் வீடு திரும்பினர்.

கொரோனா

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 84 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர்களில் 67 பேர் குணம் அடைந்து வெவ்வேறு நாட்களில் வீடு திரும்பினர். இந்த நிலையில் 54 வயதானவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த இவர், கடந்த 23-ந் தேதி சென்னையில் இருந்து காரில் தஞ்சையில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்தார். இவருக்கு தஞ்சை மாவட்ட எல்லையான விளாங்குடியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தஞ்சை கீழவாசலுக்கு வந்தார். அங்கு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து தஞ்சையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கீழவாசலில் உள்ள டபீர்குளம் செல்லும் சாலை ‘சீல்’ வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஊராட்சி பெண் உறுப்பினர்

தஞ்சை மாவட்டம் மேல கபிஸ்தலம் ஊராட்சி வெள்ளாளர் தெருவில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வெள்ளாளர் தெரு தனிமைப்படுத்தப்பட்டு போலீசாரும், வருவாய்த்துறையினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அந்த பகுதியில் 51 வயதை சேர்ந்த பெண் ஊராட்சி உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பெண் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

2 பேர் வீடு திரும்பினர்

இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கும்பகோணத்தை சேர்ந்த 35 வயது ஆண், 23 வயது பெண் ஆகிய 2 பேர் குணம் அடைந்ததையடுத்து அவர்கள் நேற்று வீடு திரும்பினர். இதன் மூலம் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்தது. தற்போது 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குணம் அடைந்து வீடு திரும்பியவர்களை மருத்துவக்கல்லூரி முதல்வர்(பொறுப்பு) டாக்டர் மருததுரை, சிறப்பு அலுவலர் டாக்டர் குமுதாலிங்கராஜ் ஆகியோர் வழங்கி வழியனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் தங்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமை படுத்துமாறு அறிவுறுத்தப் பட்டனர்.

மேலும் செய்திகள்