இன்று பணிகள் தொடங்குகிறது: தூத்துக்குடியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமி நாசினி தெளிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் 7 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அங்கு கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 9-ந் தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய முதன்மை விடைத்தாள் திருத்தும் மையங்களும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக கூடுதலாக 5 துணை விடைத்தாள் திருத்தும் மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணினி அறிவியல், வணிகவியல், கணக்கு பதிவியல் பாடங்களும், சி.கே.டி, மேல்நிலைப்பள்ளியில் அனைத்து பாடங்களும், துணை விடைத்தாள் திருத்தும் மையங்களான தூத்துக்குடி ஏ.பி.சி.வீரபாகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வணிகக்கணிதம் ஆகிய பாடங்களும், சக்திவிநாயகர் இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம் பாடங்களும், சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் மற்றும் வரலாறு பாடங்களும், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அனைத்துப்பாடங்களும் திருத்தும் பணிகள் நடக்கிறது.
1,344 ஆசிரியர்கள்
இந்த மையங்களில் மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 518 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. இந்த பணிக்காக 1,344 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களும் துப்புரவு பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யப்பட்டு தினந்தோறும் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தினந்தோறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரும் ஆசிரியர்கள் அனைவரும் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வதற்கும், ஒரு ஆசிரியருக்கு 3 முககவசம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி விடைத்தாள் திருத்துவதற்கு வசதியாக ஒரு அறையில் முதன்மை தேர்வாளர், ஒரு கூர்ந்தாய்வு அலுவலர் மற்றும் 6 உதவி தேர்வாளர்கள் ஆக மொத்தம் 8 பேர் மட்டுமே அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு உள்ளன.
சிறப்பு பஸ்கள்
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் வெவ்வேறு ஒன்றியங்களில் இருந்து மதிப்பீட்டு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக இன்று 6 வழித்தடங்களிலும், தொடர்ந்து பின்வரும் நாட்களில் 11 வழித்தடங்களிலும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இன்று கூடுதல் பஸ்கள் தேவைப்படும்பட்சத்தில் முன்னேற்பாடாக 22 தனியார் பள்ளி பஸ்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அடையாளஅட்டை வழங்கப்பட உள்ளது. இந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் உடல் வெப்பநிலையை கண்காணிக்க தகுந்த முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.