அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குகிறது
அரியலூர் மாவட்டத்தில், பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குகிறது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில், பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குகிறது.
விடைத்தாள் திருத்தும் பணி
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தினை கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை (புதன்கிழமை) முதல் அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
இந்த மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் சமூக விலகல், தனி நபர் சுகாதாரம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். வகுப்பறைகள், மேஜைகள் மற்றும் கழிவறைகள் ஆகியவற்றை கிருமி நாசினி மூலம் தினமும் சுத்தப்படுத்த வேண்டும். குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
240 ஆசிரியர்கள்
அரியலூர் மாவட்டத்திற்கு 36,012 விடைத்தாள்கள் வந்துள்ளது. இதில், சமமாக 2 மையங்களிலும் ஆசிரியர்களால் திருத்தப்படவுள்ளது. இங்கு ஒரு மையத்திற்கு 32 வகுப்பறைகள் தயார் நிலையில் உள்ளது. 240 முதுகலை ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடவுள்ளனர். இப்பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
மேலும், 10-ம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால், அவர்களை கண்டறிந்து, அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர் தொடர்பு கொண்டு, தேர்வு நாளை தெரிவித்து, அவர்களை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்துகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்வி, கல்வி மாவட்ட அலுவலர்கள் அம்பிகாபதி (அரியலூர்), பாலசுப்பிரமணியன் (உடையார்பாளையம்), பள்ளி தலைமையாசிரியர் செல்வராசு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.