ஈரானில் தவிக்கும் மீனவர்களை குமரிக்கு அழைத்து வருவது குறித்து பங்குத்தந்தைகளுடன் தளவாய்சுந்தரம், கலெக்டர் ஆலோசனை

குமரிக்கு 700 மீனவர்களை அழைத்து வருவது குறித்து பங்குத்தந்தைகளுடன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

Update: 2020-05-26 01:10 GMT
நாகர்கோவில், 

குமரிக்கு 700 மீனவர்களை அழைத்து வருவது குறித்து பங்குத்தந்தைகளுடன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை கூட்டம்

ஈரான் நாட்டில் தங்கியுள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த 700 மீனவர்களை, குமரி மாவட்டத்துக்கு அழைத்து வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குனர் ஸ்டீபன் மற்றும் பங்குத் தந்தையர்கள் ஆகியோருடன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டார்கள்.

14 நாட்கள் தனிமைப்படுத்துதல்

அப்போது தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், குமரி மாவட்டத்தில் இருந்து ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலுக்குச் சென்று அங்கு தங்கியுள்ள 700 மீனவர்களை, குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்து, கொரோனா வைரஸ் தொற்று இருக்கா என்பதை கண்டறிய பரிசோதனை செய்வது, பின்னர் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி, தங்க வைப்பதற்கான இடம் மற்றும் உணவளிப்பது ஆகியவற்றுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குனர் ஸ்டீபன் மற்றும் பங்கு தந்தையர்கள் ஆகியோருடன் ஆலோசனை செய்தார்.

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஜாண்தங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் திமிர்த்தியூஸ், பங்குத்தந்தையர்கள் சூசை ஆன்றனி (பள்ளம்), செல்வம் (குளச்சல்), அமல்ராஜ் (முட்டம்), ராஜ் (ராஜாக்கமங்கலம்துறை), பபியான்ஸ் (கடியப்பட்டணம்), மதன் (ஆரோக்கியபுரம்), லிகோரியஸ் (வாவத்துறை) ஆகியோர் கலந்து கொண்டனர்.

மீனவர்களுக்கு உதவி

ஒகி புயலின்போது கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போது இறந்த மற்றும் காணாமல் போன மீனவர்களில் 84 மீனவர்கள் குமரி மாவட்ட கூட்டுறவு இணையத்தின் மூலமாக குழு விபத்து காப்புறுதித் திட்டத்தின் கீழ் பிரிமியம் தொகை செலுத்தியுள்ளனர். அவர்களில் 16 மீனவர்களுக்கு காப்பீடு தொகையாக தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மீதமுள்ள 68 மீனவர்களுக்கு காப்பீடு தொகையாக தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகள் பெறப்பட்டு, அவர்களில் சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 5 மீனவர்களின் வாரிசுதாரர்களுக்கு நேற்று காசோலை வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மீனவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் மீதமுள்ள 63 மீனவர்களின் வாரிசுதாரர்களுக்கு அவரவர்களுடைய கிராமங்களில் நேரில் சென்று வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்