தஞ்சை அரசு மருத்துவமனையில் அதிகரித்து வரும் பிரசவங்கள் மாதத்திற்கு 1,300 குழந்தைகள் வரை பிறக்கின்றன
தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது மாதத்திற்கு 1,300 குழந்தைகள் வரை பிறக்கின்றன.
தஞ்சாவூர்,
தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது மாதத்திற்கு 1,300 குழந்தைகள் வரை பிறக்கின்றன.
அரசு மருத்துவமனை
தஞ்சை நகரின் மைய பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனை வளாகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மருத்துவப்பள்ளியும் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனை தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.
முன்பு இந்த மருத்துவமனையில் அனைத்து விதமாக நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நாளடைவில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன மருத்துவ வசதிகள் தொடங்கப்பட்ட பின்னர் தற்போது இங்கு மகப்பேறு, குழந்தைகள் நலப்பகுதி, கண் சிகிச்சை பகுதி, சித்த மருத்துவ பகுதி, காசநோய் பிரிவு ஆகியவை மட்டும் செயல்பட்டு வருகின்றன. இது தவிர புறநோயாளிகள் பிரிவும் செயல்பட்டு வருகிறது.
1¾ லட்சம் குழந்தைகள்
தமிழகத்திலேயே அதிக அளவில் பிரசவம் நடைபெறும் மருத்துவமனைகளுள் இந்த மருத்துவமனையும் ஒன்றாகும். இங்கு ஆண்டுக்கு 1¾ லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இந்த மருத்துவமனைக்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களை சேர்நதவர்களும் பிரசவத்திற்காக வருவர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன. பின்னர் சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல சிரமப்பட்டனர். இதனால் அவர்கள் அரசு மருத்துவமனையை நாடத்தொடங்கினர்.
பிரசவங்கள் அதிகரிப்பு
இதையடுத்து தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது. வழக்கமாக இங்கு ஒரு நாளைக்கு 30 முதல் அதிகபட்சமாக 40 குழந்தைகள் வரை இங்கு பிறக்கும். மாதத்திற்கு 1000 முதல் 1,100 குழந்தைகள் வரை பிறக்கும்.
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்த கர்ப்பிணிகளும் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் கடந்த 2 மாதங்களாக இங்கு பிரசவங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது மாதத்திற்கு 1300 குழந்தைகள் வரை பிறக்கின்றன. இதில் சுகப்பிரசவங்களே அதிக அளவில் நடந்து வருகிறது.
புதிய கட்டிடமும் பயன்பாடு
வழக்கமாக இந்த மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளை விட தற்போது அதிக அளவில் கர்ப்பிணிகள் வருவதால், இடப்பற்றாக்குறையை தவிர்க்க அரசு உத்தரவின் பேரில் பிரசவ வார்டுக்கு எதிரே புதிதாக கட்டப்பட்ட பிரசவ வார்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. தற்போது அங்கும் கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டு பிரசவங்கள் நடந்து வருகின்றன.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், “வழக்கமாகவே இந்த மருத்துவமனையில் பிரசவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக இது மேலும் அதிகரித்து உள்ளது. வழக்கமாக இங்கு பிறக்கும் குழந்தைகளை விட மாதத்திற்கு 200 முதல் 250 குழந்தைகள் வரை கூடுதலாக பிறக்கின்றன. இங்கு பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு உரிய சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. முன்பு வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வந்தனர். பின்னர் நாளடைவில் அது குறைந்தது. தற்போது ஊரடங்கு காரணமாக அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் கர்ப்பிணிகள் அதிக அளவில் சிகிச்சைக்கு வருகிறார்கள்” என்றனர்.