கோடையை சமாளிக்க கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் குடும்பத்தினருடன் குதூகல குளியல்

கோடையை சமாளிக்க கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் மக்கள் குடும்பத்தினருடன் குதூகலமாக குளித்து கொண்டாடினர்.

Update: 2020-05-25 23:30 GMT
ஊத்துக்கோட்டை,

தமிழகத்தில் கடந்த 4-ந்தேதி தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் கடுமையாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மக்கள் கொரோனா பீதியில் ஒருபக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கத்திரி வெயிலின் உக்கிரத்தால் மனமும், உடலும் வெம்பி காணப்படுகின்றனர்.

கொரோனாவின் அச்சுறுத்தலுக்காக வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக மின் விசிறிகளை இயக்கினால் அது வெப்பக்காற்றை தான் உமிழ்கிறது.

வீட்டில் ஏ.சி. போட்டு அமரலாம் என்றால் ஏ.சி. அறையில் இருந்துவிட்டு ஏதேனும் வேலை செய்வதற்காக அடுத்த அறைக்கு சென்றாலே வெப்பத்தின் காட்டம் உடம்பை துளைக்கும். எங்கேயாவது கடற்கரை, பூங்காவிற்கு போகலாம் என்றால் ஊரடங்கு உத்தரவு காரணமாக பூங்காக்கள் மூடப்பட்டுள்ளதுடன், கடற்கரைக்கு செல்வதற்கும் மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இவ்வாறு வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மக்களுக்கு சென்னையை அடுத்த பூந்தமல்லிக்கு அருகே உள்ள தண்டலம் பகுதியில் ஓடும் கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் கடந்த ஒரு வார காலமாக தண்ணீர் வருவது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். அது போன்று கிருஷ்ணா நதி நீர் கால்வாயின் குளிர்ந்த நீரின் அருமையும் இந்த வெயில் காலத்தில் தான் தெரிகிறது.

அதுவும் முட்டளவு தண்ணீர் குளுமையாகவும், அழுக்குகள் இன்றி மிகவும் தெளிவாகவும் பாய்ந்து செல்வது காண்போர் கண்களுக்கு பரவசமாக இருப்பதுடன், பார்ப்பவர்களை எல்லாம் ஒரு குளியல் போட செய்யும் ஆசையை உருவாக்கும் வகையில் கிருஷ்ணாநதி நீர் கால்வாய் அமைந்துள்ளது. எனவே சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து இந்த தண்ணீரில் குளித்து செல்கின்றனர். இவ்வாறு குளிப்பவர்கள் நேரம் காலம் மறந்து அதிக நேரம் அந்த தண்ணீரில் உருண்டு, புரளுகின்றனர்.

தற்போதைய அக்னி நட்சத்திர காலத்தில் இந்த குளிர்ந்த நீரின் சுகத்தை அனுபவிப்பதற்காக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கூட கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்று இந்த கிருஷ்ணா நதி நீர் கால்வாய்க்கு குடும்பத்துடன் வந்து குளித்து குதூகலிக்கின்றனர். ஆனால், அந்த பகுதியில் உள்ள மக்களோ, தினம் தினம் இந்த குளிர்ந்த தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து குதூகலிப்பதோடு நண்பர்களுடன் இணைந்து மீன்களை பிடித்தும் உற்சாகம் அடைகின்றனர்.

இவ்வாறு மக்கள் குளிப்பதை பார்க்கும் அந்த வழியாக செல்பவர்கள் நம்மால் இவ்வாறு குளிக்க முடியவில்லையே என்ற ஒருவித ஏக்கத்துடன் பயணிப்பதை பார்க்க முடிகிறது. மொத்தத்தில் இப்போதைய கோடை காலத்தில், கிருஷ்ணா நதி நீர் கால்வாய் அருகில் குடியிருப்பவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்றால் அது மிகை அல்ல.

மேலும் செய்திகள்