வியாபாரிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் - விக்கிரமராஜா கோரிக்கை
கொரோனா ஊரடங்கு காரணாமாக பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள் உள்பட 450 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் இந்திரஜித் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நாள் முதல் தொடர்ச்சியாக அரசு விதிக்கிற விதிமுறைகளை வியாபாரிகள் கடைபிடித்து வருகின்றனர், ஆனால் அரசு துறை அதிகாரிகள் கடைகளை திறப்பதில் வியாபாரிகளுக்கு பல்வேறு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் வியாபாரிகள் விதிகளை மீறுகின்றனர், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்று கூறி அரசு அதிகாரிகள் அபராதம் விதிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வணிகர் சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைகளை பெற்று உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் காஞ்சீபுரம் மண்டல தலைவர் அமல்ராஜ், ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் வெங்கடேசன், நந்திவரம்-கூடுவாஞ்சேரி அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.