திருப்பத்தூர் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் போலீசுக்கு பயந்து தற்கொலை

திருப்பத்தூர் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-05-23 00:05 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர், நாராயணசாமியின் மகள் சுவேதாவை திருமணம் செய்துள்ளார். சுவேதாவுக்கு தற்போது 3-வதாக குழந்தை பிறந்து தாய் வீட்டில் உள்ளார்.

சம்பவத்தன்று பெருமாள், மனைவி சுவேதாவை தன்னுடன் குடும்பம் நடத்த அனுப்பி வைக்குமாறு மாமனார் வீட்டுக்குச் சென்று கேட்டுள்ளார். அதற்கு மாமனார், குழந்தை பிறந்து சிறிது நாட்களே ஆகிறது, இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அனுப்பி வைப்பதாக, கூறினார்.

ஆத்திரம் அடைந்த பெருமாள், எனது மனைவியை எதற்காக நீ அனுப்ப மாட்டேன் என்கிறாய்? எனக் கேட்டு மாமனார் நாராயணசாமியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினார். அதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து அவர், மருமகன் பெருமாள் மீது திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதையறிந்த பெருமாள், போலீசார் தன்னை பிடித்து விசாரித்து, சிறையில் அடைத்து விடுவார்களோ எனப் பயந்து வீட்டின் மின்விசிறியில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்