பொதுப்பணித்துறை ஊழியர்கள் சட்டசபையை முற்றுகை
நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தி பொதுப்பணித்துறை ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் 1,311 வவுச்சர் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் 16 நாட்கள் வேலை வழங்கி, ரூ.3,200 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த சம்பளமும் கடந்த 10 மாதங்களாக வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், நிலுவை சம்பளம் வழங்க வேண்டும், தினக்கூலி ஊழியர்களாக மாற்ற வேண்டும், மத்திய அரசு நிர்ணயித்துள்ளபடி நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும், சம்பளத்தை அரசு கருவூலம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் திடீரென நேற்று காலை சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் சட்டசபையின் உள்ளே செல்லாமல் இருக்க போலீசார் தடுப்புகட்டைகள் மூலம் தடுத்து நிறுத்தினர். உடனே அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இது பற்றிய தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.