விவசாயிகளுக்கு ரூ.14 கோடி பயிர்க்கடன் கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் தகவல்

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் கூறினார்.

Update: 2020-05-20 23:00 GMT
பெங்களூரு,

கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், தனது துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

“கூட்டுறவு சங்கங்கள் ஏழை விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும். சர்க்கரை ஆலைகளுக்கு கொடுப்பதை விட விவசாயிகளுக்கு கடன் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். பிற மாவட்டங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கடன் வழங்கும் வழக்கத்தை கைவிட வேண்டும். குறுகிய கால கடன் புதிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

கடன் வழங்குவதில் எந்த தொந்தரவும் ஏற்படக்கூடாது. குறித்த காலத்திற்குள் கடன் வழங்காவிட்டால், அது வேறு நோக்கத்திற்கு பயன்படுத்துவது அதிகரிக்கும். நபார்டு வங்கி கூடுதலாக ரூ.1,750 கோடி கடன் வழங்கியுள்ளது. நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் இந்த கடன் வழங்கும் இலக்கை அடைய உழைக்க வேண்டும். தகுதியான விவசாயிகள் கடன் கிடைப்பதில் இருந்து பாதிக்கப்படக்கூடாது. கிசான் கார்டுகள் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். பழைய கார்டுகள் செயல்படுவது இல்லை. அத்தகைய விவசாயிகளுக்கு புதிய கார்டுகள் கிடைக்க செய்ய வேண்டும்.

கணவர் இறந்திருந்தால், அந்த கிசான் கார்டை அவரது மனைவி பெயருக்கு மாற்றி கொடுக்க வேண்டும். களப்பணி ஆற்றும் அதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். மண்டல வாரியாக ஆலோசனை கூட்டங்களை நடத்த உள்ளேன்.

விவசாயிகளுக்கு வழங்கப் படும் கடன் அளவை அதிகரிக்க வேண்டும். நான் விருப்பப்பட்டு இந்த கூட்டுறவு துறையை பெற்றுள்ளேன். கூட்டுறவு துறையில் ஒத்துழையாமை இருக்கவே கூடாது. அனைத்து அதிகாரிகளும் இணைந்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். கூட்டுறவுத்துறையில் இன்னும் பல்வேறு மாற்றங்கள் வர வேண்டும். பெங்களூரு மண்டலத்தில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரத்து 977 விவசாயிகளுக்கு ரூ.916 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.712 கோடியாக இருந்தது.

கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது. மகளிர் சுயஉதவி குழுக்கள், தெருவோர வியாபாரிகளுக்கும் கடன் வழங்க வேண்டும். வேளாண்மை சந்தை சட்டதிருத்தத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. எதிர்க்கட்சிகள் தான் இதை கண்டித்து போராட்டம் நடத்துகின்றன.

இவ்வாறு எஸ்.டி. சோமசேகர் கூறினார்.

மேலும் செய்திகள்