வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதால் கட்டுமான பணிகள் பாதிக்கும் அபாயம்
வேலூர் மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்கள் ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்பியதால் கட்டுமான பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் வேலைகளை முடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சாலை அமைத்தல் மேம்பாலங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள் கட்டும் பணிகள் நடந்து வந்தன. அதைத்தவிர வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் புதிய, பஸ் நிலையத்தை சீரமைத்தல், நவீன கார் பார்க்கிங் மையம் அமைத்தல், பாதாள சாக்கடை திட்டம், கோட்டையை சீரமைத்தல், குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன.
இந்த பணிகளை குத்தகை (டெண்டர்) முறையில் ஒப்பந்ததாரர்கள் எடுத்து நடத்தினர். இந்த பணிகளில் உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் வடமாநில தொழிலாளர்களும் ஈடுபட்டு வந்தனர். வடமாநிலங்களில் கட்டுமான பணிக்கு வழங்கப்படுவதை விட அதிகமாக கூலி வழங்கப்பட்டதால் பல வடமாநில தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வேலூர் மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்தனர். குறிப்பாக வேலூரை அடுத்த பூட்டுத்தாக்கு மற்றும் வேலூரில் கட்டப்பட்டு வந்த தனியார் மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆயிரத்துக்கும மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் செய்து வந்தனர்.
இந்த நிலையில் உலகையே அச்சுறுத்தும் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஒருவரிடமிருந்து மற்ற நபருக்கு கொரோனா வைரஸ் எளிதில் தொற்றும் என்பதால் கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. தினமும் வேலை செய்தால் தான் சாப்பாடு என்ற நிலையில் வாழ்ந்து வந்த தொழிலாளர்கள் ஊரடங்கால் பொருளாதார ரீதியாக மிகவும் அவதியடைந்தனர். மேலும் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாத நிலை காணப்பட்டது. அதனால் பல்வேறு பிரச்சினைகளை சந்திந்தனர்.
இதனால் வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர். போக்குவரத்து வசதி இல்லாதால் அவர்கள் வேலூர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் வடமாநிலத்தவர்கள் ரெயில், பஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 9 ஆயிரம் வடமாநிலத்தவர்கள் அவர்களின் ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டுமான பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது. தொழிலாளர்கள் வேலை நடைபெறும் இடத்தில் தங்கியிருந்து பணிபுரிய வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் கட்டுமான பணிகள் தொடங்கின. வேலூர் மாநகரில் கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி பணிகளான புதிய பஸ் நிலையத்தை நவீன முறையில் கட்டுதல், பழைய பஸ் நிலையம் காந்திநகர், பில்டர்பெட் சாலையில் கால்வாய் அமைக்கும் உள்பட பல்வேறு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வந்த பல்வேறு பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி சென்றதால் கட்டுமான பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் தொழிலாளர்களை கொண்டு அந்த பணிகள் நடந்து வருகிறது. வடமாநில தொழிலாளர்களை விட உள்ளூர் தொழிலாளர்கள் அதிகம் கூலி கேட்பதால் ஒப்பந்ததாரர்கள் அவர்களுக்கு வேலை கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். அதனால் பணிகளை குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் முடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. வேலூரில் தனியார் மருத்துவமனை கட்டுமான பணியில் ஈடுபட்ட 700 வடமாநில தொழிலாளர்களில் 500 பேர் சொந்த ஊர் சென்று விட்டனர். அதனால் அந்த மருத்துவமனை திறப்பது மேலும் சில மாதங்கள் தள்ளிபோகும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகளை பல தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. அந்த நிறுவனத்தில் குறைந்த அளவே வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். பெரும்பாலான தொழிலாளர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். வடமாநில தொழிலாளர்களுக்கு பதிலாக வேறு நபர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளனர்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்தும் தொழிலாளர்கள் அழைத்து இந்த பணிகளில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே குறிப்பிட்ட காலத்துக்குள் அனைத்து பணிகளையும் முடிக்கும்படி ஒப்பந்ததாரர்களிடம் தெரிவித்து உள்ளோம். அனைத்து பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும் சில பணிகள் குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் நிறைவடைவது தாமதமாகும்” என்று தெரிவித்தனர்.