பெரம்பலூர், அரியலூரில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை

அரியலூர், பெரம்பலூரில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.

Update: 2020-05-20 06:26 GMT
பெரம்பலூர், 

அரியலூர், பெரம்பலூரில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.

கொரோனா வைரஸ் பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 139 பேரும், அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 355 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தினமும் நிறைய பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. இதனால் பெரம்பலூர் மாவட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்திலும் நேற்று யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்படாததால் அந்த மாவட்ட மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மொத்தம் 139 பேரில், 113 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 26 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 88 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

பரிசோதனைக்காக...

இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில், அவர் பெரம்பலூர் மாவட்டம், விஜயகோபலபுரத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்து சென்றுள்ளார். இதனால் அந்த தொழிற்சாலையில் உள்ள மற்ற தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என சுகாதாரத்துறையினர் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மொத்தம் 355 பேரில், 346 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 9 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 114 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்