இருதரப்பினரிடையே மோதல்: மதுரையில் முன்னாள் எம்.எல்.ஏ. கைது
மதுரை அருகே இருதரப்பினரிடையே நடந்த மோதல் காரணமாக மதுரையில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
புதூர்,
மதுரை கருவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சரத் (வயது 30). இவர் சம்பவத்தன்று கருவனூர் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர் இவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கைகலப்பு ஏற்பட்டு, அடிதடியாக மாறியது. இரு கோஷ்டிகளும் கடுமையாக மோதிக்கொண்டனர்.
அப்போது கற்களாலும், கம்பியாலும் மாறி மாறி தாக்கினர். இதில் அங்கிருந்த வாகனங்களும், சில வீடுகளும் சேதமடைந்தன. இதுபற்றி தகவல் அறிந்ததும் சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரு தரப்பினரையும் விசாரித்த போலீசார், காயம்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. கைது
மேலும் இந்த மோதல் குறித்து கருவனூரை சேர்ந்த புவியரசன் அளித்த புகாரின்பேரில் போலீசார் 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இதில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருவனூரை சேர்ந்த பொன்னம்பலம் (72), அவரது மகன் திருச்சிற்றம்பலம், சண்முகசுந்தரம் (42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பொன்னம்பலம் மகன் திருச்சிற்றம்பலம் கொடுத்த புகாரின் பேரில் மற்றொரு தரப்பைச் சேர்ந்த புவியரசன் (23), பாண்டி (19), ராஜதுரை (25) உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இருதரப்பு மோதல் தொடர்பாக மொத்தம் 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.