பழவூர் அருகே புதிய நீர்த்தேக்க திட்டத்திற்கான இடத்தை இன்பதுரை எம்.எல்.ஏ. ஆய்வு
பழவூர் அருகே புதிதாக அமைய இருக்கும் நீர்த்தேக்க திட்டத்திற்கான இடத்தை இன்பதுரை எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார்.
வள்ளியூர்,
பழவூர் அருகே புதிதாக அமைய இருக்கும் நீர்த்தேக்க திட்டத்திற்கான இடத்தை இன்பதுரை எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார்.
புதிய நீர்த்தேக்கம்
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே தெற்கு கருங்குளம் கிராமத்தின் மேற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து மழைக்காலங்களில் வரும் மழை நீர் அப்பகுதியில் தேங்கி இயற்கையாகவே அங்கு ஒரு நீர்த்தேக்கம் போல் காட்சியளிக்கிறது. அந்த நீர்த்தேக்கத்தை விரிவுபடுத்தி புதிய அணைக்கட்டு ஒன்றை உருவாக்கினால் அதன் மூலம் ராதாபுரம் தொகுதியின் தென்பகுதியில் உள்ள தெற்குகருங்குளம், பழவூர், செட்டிகுளம், ஆவரைகுளம், வடக்கன்குளம், சிதம்பரபுரம் யாக்கோபுரம், காவல்கிணறு உள்பட பல்வேறு ஊராட்சிகளில் தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை முழுமையாக தீர்க்க முடியும்.
ஆகவே இந்த பகுதியில் நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும் என்று தொகுதி மக்கள் சார்பில் ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையில் இந்த நீர்த்தேக்கத்திற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.
இன்பதுரை எம்.எல்.ஏ. ஆய்வு
இதற்கான முதல்கட்ட பணிகளுக்காக இன்பதுரை எம்.எல்.ஏ. மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பத்மா தலைமையிலான அதிகாரிகள் தெற்கு கருங்குளத்தில் அமைய உள்ள புதிய நீர்த்தேக்க திட்ட பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர்.
நிகழ்ச்சியில் ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, ராதாபுரம் நாங்குநேரி தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வின்போது இன்பதுரை எம்.எல்.ஏ. கூறுகையில், “எனது கோரிக்கையை ஏற்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கை அறிவிப்புகளின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளியூரை அடுத்த தெற்கு கருங்குளத்தில் புதிய நீர்த்தேக்க திட்டம் ஒன்றை தமிழக அரசு செயல்படுத்தும் என அறிவித்திருந்தார். இது இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளுக்கு பயன் உள்ளதாகவும் அமையும். இதற்காக முதல்-அமைச்சருக்கு தொகுதி மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.