சேலத்தில் இருந்து ரெயில் மூலம் 347 தொழிலாளர்கள் ராஜஸ்தான் புறப்பட்டனர்
சேலத்தில் இருந்து ரெயில் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 347 பேர் அவர்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அவர்களை மாவட்ட கலெக்டர் ராமன் வழியனுப்பி வைத்தார்.
சேலம்,
சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 347 பேரை அவர்களின் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கி, அவர்களை ரெயில் மூலம் அனுப்பி வைத்தார். பின்னர் கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம், முதல்கட்டமாக நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 55 புலம் பெயர்ந்த தொழிலாளர்களும், ஈரோடு மாவட்டத்தில் 92 தொழிலாளர்களும், தர்மபுரி மாவட்டத்தில் 4 தொழிலாளர்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 தொழிலாளர்களும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 25 தொழிலாளர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 47 தொழிலாளர்களும், சிவகங்கை மாவட்டத்தில் 22 தொழிலாளர்களும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 93 புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் என மொத்தம் 347 பேர் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ரெயில் மூலம் ராஜஸ்தான் மாநிலத்துக்கு புறப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.
இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், சேலம் உதவி கலெக்டர் மாறன், மகளிர் திட்ட இயக்குனர் செல்வகுமார், சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, சேலம் ரெயில்வே கோட்ட மண்டல மேலாளர் சுப்பாராவ், முதுநிலை கோட்ட மேலாளர் (வணிகம்) ஹரிகிருஷ்ணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.